மதிப்பீட்டில் திருப்தி இல்லையென்றால் தேர்வு எழுதலாம் – சிபிஎஸ்இ..!!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு வரையறையில் திருப்தி இல்லை என்றால், கோவிட்டிற்குப் பிறகு தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ செயலாளர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 வைரஸ் 2வது அலை காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் தேர்ச்சி, மதிப்பெண் வழங்குவதற்கான மதிப்பீடு எவ்வாறு வரையறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து 2 வாரங்களில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தது.

இதுகுறித்து சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: சிபிஎஸ்இ மதிப்பீடு வரையறை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

இன்னும் 2 வாரத்திற்குள் தயாராகிவிடும். மாணவர்களுக்கு மதிப்பீடு வரையறையில் திருப்தி இல்லை என்றால், கோவிட்டிற்குப் பிறகு தேர்வு நடத்தப்படும்.

முடிவு வெளியிடப்படும்போது மாணவர்கள் எந்தவிதமான இடையூறையும் சந்திக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க உறுதியாக உள்ளோம்.

உயர்படிப்புக்கான அட்மிஷன் துவங்குவற்கு முன் அவர்கள் தேர்வு முடிவை பெறுவார்கள் என்ற உறுதியை மாணவர்களுக்கு அளிக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே