ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், தமிழக அரசின் பட்ஜெட் பஞ்சு மிட்டாய் போல் உள்ளதாக விமர்சித்தார்.
நெல்லுக்கான ஆதார விலையை அரசு உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தி பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், ஆளுநர் என்பவர் மாநில அரசின் அங்கமே தவிர, மத்திய அரசின் பிரதிநிதி அல்ல எனவும், உச்சநீதிமன்றம் தெரிவித்த பிறகும், 7 பேரின் விடுதலையில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், 7 பேரின் விடுதலை என்ற கருத்தில் மாற்றுக்கருத்து இல்லை எனவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவும் அதே தான் எனவும் குறிப்பிட்டார்.
7 பேரை விடுதலை செய்யலாம் என்று தீர்மானத்தை சட்டத்தின் அடிப்படையில் அமைச்சரவை கூடி முடிவெடுத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுநரிடம் 7 பேரின் விடுதலை தொடர்பாக மாநில அரசு கேட்டு சொல்ல வேண்டும் என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியதுடன், அதனை கேட்டீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறதே தவிர, எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என குறிப்பிட்டார்.
அப்போது பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 7 பேர் விடுதலையில் அக்கறை இருப்பதால் தான் தீர்மானம் நிறைவேற்றியதாகவும், அவர்களை விடுதலை செய்வதில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், ஆளுநரின் நல்ல முடிவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பதாகவும்; நல்ல முடிவு எடுப்பார் எனவும் நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், திமுக ஆட்சியின்போது நளினியை தவிர்த்து மீதமுள்ள 6 பேரையும் தூக்கிடலாம் என தீர்மானம் நிறைவேற்றியதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.