CAA ஆவண நகலை கிழித்தெறிந்த மாணவி!

பட்டமளிப்பு விழா மேடையில் குடியுரிமை திருத்தச் சட்ட நகலை மாணவி கிழித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அதனை திரும்பப் பெற வேண்டுமெனக் கோரி எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களும், குடியுரிமை சட்ட எதிர்ப்புக்கான போராட்டக் களமாகி வருகின்றன.

மேற்குவங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அதில் கலந்துகொள்ள வந்த ஆளுநர் ஜகதீஷ் தன்கருக்கு எதிராக மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியதால் ஆளுநர் பாதி வழியிலேயே திரும்பிச் சென்றார்.

இதனையடுத்து துணைவேந்தர் சுரஞ்சன் தாஸ் தலைமையில் பட்டமளிப்பு விழா நடந்தது.

அப்போது சர்வதேச உறவுகள் துறையில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி தேபஸ்மிதா சவுத்ரி பட்டத்தை பெற மேடை ஏறினார்.

அப்போது தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை எதிர்ப்பதாக தெரிவித்தார். தன்னுடைய ஆவணங்கள் எதையும் காட்ட முடியாது என பார்வையாளர்களை பார்த்து முழங்கிய அவர் தனது கையில் வைத்திருந்த குடியுரிமை திருத்தச் சட்ட நகலையும் கிழித்து எறிந்தார்.

மேலும் இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கிவிட்டு தனது பட்டத்தைப் பெற்றுக்கொண்டு கீழே இறங்கினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவி தேபஸ்மிதா சவுத்ரி,

  • பல்கலைக்கழத்திற்கு நான் எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை.
  • எனக்கு பிடித்த கல்வி நிறுவனத்தில் இந்த பட்டத்தை பெற்றதில் பெருமைப்படுகிறேன்.
  • ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான எனது எதிர்ப்பை பதிவு செய்ய இந்த மேடையைத் தேர்ந்தெடுத்தேன் என்று கூறியுள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை திருத்தச் சட்ட நகல் மாணவி  கிழித்தெறியப்பட்டது அங்கிருந்த  அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே