குலுக்கல் முறையில் ஊராட்சித் தலைவர் தேர்வு!

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மெட்டில்பட்டி ஊராட்சித் தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மெட்டில்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஜெயச்சந்திரன், கதிர்காமன், முனியசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.

கடந்த 30-ம் தேதி நடந்த தேர்தலில் 804 வாக்குகள் பதிவாகின. இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஜெயச்சந்திரன் 321 வாக்குகளும், கதிர்காமன் 319 வாக்குகளும், முனியசாமி 133 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இதே போல் தபால் வாக்குகளில் ஜெயச்சந்திரனுக்கு ஒரு வாக்கும், கதிர்காமனுக்கு 3 வாக்குகளும் பெற்றனர்.

இதனால் ஜெயச்சந்திரன் மற்றும் கதிர்காமன் ஆகியோர் தலா 322 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்தனர்.

இதையடுத்து ஊராட்சி தலைவர் பதவிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த குலுக்கலில் கதிர்காமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல தஞ்சாவூர் யூனியனில், 61 பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று, இன்று வாக்கு நேற்று எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

இதில் மாத்தூர் கிழக்கு பஞ்சாயத்தில், பஞ்சாயத்து மன்றத் தலைவர் பதவிக்கு மலர்விழி, மஞ்சுளா ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

ஓட்டு எண்ணிக்கையின் போது, இருவரும் தலா 409 ஓட்டுகள் பெற்றனர்.

இதையடுத்து பஞ்சாயத்து தேர்தல் சட்டத்தின்படி இரு வேட்பாளர்களிடமும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்போவதாக அறிவித்தார்.

பின்னர் இரு வேட்பாளர்கள் முன்னிலையில் அவரவர் பெயரை துண்டு சீட்டில் எழுதி அதனை குலுக்கி பிரபாகரன் எடுத்தார்.

அதில் மஞ்சுளா பெயர் வந்தது. இதையடுத்து மஞ்சுளா பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே