“வாய்ப்பு கொடுங்கள் எனக்கு 66 வயது ஆகிவிட்டது” – கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை..!!

தண்ணீர் இல்லாத ஊரில் வாஷிங்மிஷின் தருவதுதான் கெட்டிக்காரத்தனமா என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம், கோவை ராஜவீதி தேர்நிலைத் திடலில் நேற்று இரவு நடைபெற்றது.

தலைமை வகித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:

நான் ஐஏஎஸ் படிக்க வேண்டுமென்பது எனது தந்தையின் விருப்பம். நான் நடிகனாக பிறகும், வீட்டிலிருந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்.

அவரது கனவை நிறைவேற்ற முடியவில்லை. அதை ஈடு செய்யும் வகையில், மக்கள் நீதி மய்யத்தில் ஐஏஎஸ் படித்தவர்கள் உள்ளனர்.

அத்துடன், அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்களும் உள்ளனர். படித்தவர்களை என்னைச் சுற்றி வைத்துக் கொள்வது எனது வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது.

கோவையில் ஏன் போட்டி போடுகிறீர்கள் என்கின்றனர்.

ஏன் கூடாது என்பதே எனது பதில். தொடக்கத்தில் இருந்தே என்னை குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடக்க முயற்சிகள் நடைபெற்றன.

மயிலாப்பூரில் எனது உறவினர்கள் உள்ளதால், அங்குதான் போட்டியிடுவார் என்றார்கள். எனக்கு 234 தொகுதிகளிலும் உறவினர்கள் உள்ளனர்.

தேர்தல் முடிந்தவுடன் நடிக்கச் சென்று விடுவார் என்கிறார்கள். அது எனது தொழில். சொல்பவர்களுக்கு அரசியல் தொழில்.

எனக்கு அரசியல் கடமை. அதுதான் அவர்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம். இந்த வித்தியாசத்தால் அவர்கள் தோற்பார்கள். நாங்கள் வெற்றி பெறுவோம்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப் பெயர் பெற்ற கோவை, திமுகவின் ஆட்சிக்காலத்து மின்வெட்டால் முடங்கியது. அதற்குப் பிறகு ஆட்சி செய்தவர்கள், ஒரு லட்சம் ரூபாய் கடனை பல மடங்கு உயர்த்தி விட்டனர். மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை.

இப்படி தண்ணீர் இல்லாத ஊரில், வாஷிங்மிஷின் தருவதுதான் கெட்டிக்காரத்தனமா? இவர்களுக்கு ஆளும் தகுதியும், ஆளுமையும் இல்லை என்பது இதிலிருந்தே புலப்படுகிறது.

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பார்கள். கொங்கின் சங்க நாதம் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும். அந்தக் குரலாக நான் இருக்க வேண்டும்.

சினிமா துறையில் நான் செய்த மாற்றங்களையும், சாதனைகளையும் தமிழகத்திலும் செய்து காட்டுவேன்.

மூன்றாவது அணி வெற்றி பெறாது என்கின்றனர்.

மூன்றாவது அணியாக வந்து, வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தை ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டியது நமது கடமை. அதை செய்வதற்கு மக்கள் எனது கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

தமிழ் சினிமா துறையில் செய்த மாற்றத்தை போல தமிழகம் முழுவதும் மாற்றம் செய்து காட்ட, தங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டத்தில், கட்சியின் துணைத் தலைவர்கள் ஆர்.மகேந்திரன், வி.பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே