நாடு முழுவதும் மானியமில்லாத காஸ் சிலிண்டரின் விலை ரூ.147 வரை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.

அதன்படி நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சாமானிய மக்கள் பயன்படுத்திவரும் மானியமில்லாத சிலிண்டர் விலையும் தற்போது உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் மானியமில்லாத சிலிண்டரின் விலையில் ரூ.19 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. 

அதன்படி கடந்த மாதம் சென்னையில், 14 கிலோ 200 கிராம் எடைகொண்ட மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.714க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அது ரூ.19 விலை உயர்ந்து இனி ரூ.734க்கு விற்கப்படுகிறது.

இந்த விலை ஏற்றம் கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.144 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 19 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சிலிண்டர் விலை தற்போது ஆயிரத்து 362 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மானியமில்லாத சிலிண்டர்கள் விலை இன்று முதல் மீண்டும் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமும் 30 லட்சம் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் இண்டேன் நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சிலிண்டரின் விலை டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

  • டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.50 உயர்த்தப்பட்டு ரூ.858.50 ஆகவும்,
  • சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆகவும்,
  • கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு புதிய விலையாக ரூ.896 ஆகவும்,
  • மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.50 ஆகவும் ஒரு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.

மேலும் அரசின் புள்ளிவிபரங்களின் படி சுமார் 11 கோடி பேர் மானியமில்லாத சிலிண்டர்களை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மாதந்தோறும் மானியமில்லாத சிலிண்டர்களின் விலை உயர்ந்து வருவது சாமானிய மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலைகள் தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது என்றால் தற்போது மக்களின் அத்தியாவசிய தேவைகளான சிலிண்டர்களின் விலை உயர்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே