இருக்கைகளுக்கு நடுவில் இடைவெளி, கேனில் மட்டும் பெப்சி: பிவிஆர் திட்டம்

கரோனா கட்டுப்பாட்டுக்கான ஊரடங்கு முடிந்ததும் திரையரங்குக்கு வர யோசிக்கும் ரசிகர்கள் பாதுகாப்பாக உணர, இருக்கைகளுக்கு நடுவில் இடைவெளி தர பிவிஆர் தரப்பு பரிசீலித்து வருவதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி கவுதம் தத்தா கூறியுள்ளார்.

இந்தியாவில் அதிக அளவில் திரையரங்குகளை வைத்திருக்கும் நிறுவனம் பிவிஆர். இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கச் சங்கிலி இவர்களுடையதே. ஊரடங்கு முடிந்து மீண்டும் மக்கள் கூட்டமாக ஒரு இடத்தில் சேருவது பெரிய சவால் என்பதால் மக்களைத் திரையரங்குகளுக்கு வரவழைக்கப் பல யோசனைகளைத் திரையரங்கு உரிமையாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

இதுபற்றிப் பேசிய கவுதம் தத்தா, “நாங்கள் ஒரு சில விஷயங்களைத் திட்டமிட்டு வருகிறோம். திரையரங்குகளில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைத்திருப்பதோடு, திரையரங்குக்குள் சமூக விலகலைக் கொண்டு வரலாம் என யோசிக்கிறோம். உதாரணத்துக்கு நீங்கள் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கியிருந்தால் உங்களுக்குப் பக்கத்தில் ஒரு இருக்கையை காலியாக விட்டே அடுத்த டிக்கெட்டைப் பதிவு செய்வோம்.

மக்கள் மீண்டும் பாதுகாப்பாக உணரும்வரை ஒரு சில வாரங்களுக்கோ, ஒரு மாதத்துக்கோ இதுதொடரும். எல்லாவற்றையும் போல திரையரங்கமும் பாதுகாப்பானதுதான் என ரசிகர்களுக்கு நம்பிக்கை வரவழைக்க நிறைய விஷயங்கள் செய்யப்படவுள்ளன. தூய்மைப்படுத்துதலில் இருந்து பணியாளர் பயிற்சி வரை ஒவ்வொரு கட்டத்திலும் பல விஷயங்களைச் சிறிதும் பெரிதுமாகத் திட்டமிடுகிறோம்.

வெறும் கேன்களில் மட்டும் விற்கலாமா என்று பெப்சியிடம் பேசி வருகிறோம். இது எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்று தெரியாது. ஆனால், நிறைய யோசித்து வருகிறோம்.

எங்கள் நிறுவனம் செயல்பட ஆரம்பித்த இந்த 21 வருடங்களில் ஒரு முறை கூட அனைத்துத் திரையரங்குகளும் மூடப்படவில்லை. லாபம், நஷ்டம் என்று வந்திருக்கிறது. ஆனால் எங்கள் வருமானம் பூஜ்ஜியத்தில் இருந்ததில்லை. நாங்கள் மட்டுமல்ல, உலக அளவில் இந்தத் துறையில் நிறைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மிகவும் கடினமான சூழல்.

இது எதுவும் கட்டாயத்தின் பேரில் நடக்கவில்லை. ஏனென்றால் இந்தப் பிரச்சினையின் தீவிரம் எவ்வளவு தூரம், எப்போது நாங்கள் மீண்டும் அரங்குகளைத் திறப்போம் என்று தெரியாது. சூழல் சற்று சரியானால், நாங்கள் அரங்குகளைத் திறக்கும் நிலையில் உள்ளோம். இதுவே முடிவு.

அடுத்த சில மாதங்கள் இந்த நிலை தொடர்ந்தாலும் எங்கள் தரப்பில் யாரும் வேலை இழக்கமாட்டார்கள். ஆனால் சம்பளத்தில் குறைக்கப்படும். ஏனென்றால் எங்களுடையது பெரிய அணி. இந்த ஊரடங்கு முடிந்த பின் மீண்டும் நிர்வாகச் சூழல் ஆய்வு செய்யப்படும்.

இப்போது ஸ்ட்ரீமிங் தளங்கள் புதிய கதைகளுக்கான பசியைப் போக்கியுள்ளன. ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு, நம் தேசம் முழுவதும் இரண்டு லட்சம் பேர் பிவிஆர் திரையரங்குகளுக்கு வந்தனர். அப்போது 50 சதவீத அரங்குகள் மட்டுமே இயக்கப்பட்டிருந்தன. வீட்டில் இருப்பவர்கள் வெளியே வர எதுவும் தரத் தயாராக இருக்கிறார்கள். நாம் சமூகத்துடன் கலக்கும் இனம். நாங்கள் சினிமா வியாபாரத்தில் இருப்பதாகச் சொல்ல மாட்டேன். நாங்கள், வீட்டிலிருந்து வெளியே வந்து பொழுதுபோக்கும் வியாபாரத்தில் இருப்பதாகத்தான் சொல்வேன். அது கண்டிப்பாக எழுச்சி பெறும். இப்போதல்ல, பிறகல்ல, எப்போதும்” என்று கவுதம் தத்தா கூறினார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே