வலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..!

தமிமுன் அன்சாரி MLA,
மனிதநேய ஜனநாயக கட்சி.

இது அறிவியல், வரலாறு, சமூகவியல், உயர்சிந்தனை இவற்றுக்கு வழிகாட்டுவதற்கு பெரிதும் பயன்படவேண்டும்.

இதற்கு நேர் மாறாக சண்டைகள், குழு மோதல்கள்,
அவதூறுகள், சமூக பகைமை, தனிநபர் கண்ணியத்தை அழித்தல் மற்றும் அரசியல் சூழ்ச்சி ஆகியவற்றுக்கு துணைப்போவது வருத்தமளிக்கிறது.

‘வரங்களே
சாபங்கள் ஆனால்
தவங்கள் எதற்காக..?’

என்ற கவிக்கோ. அப்துல் ரஹ்மானின் கவிதைகள்தான் நினைவுக்கு வருகிறது.

சமூக இணையதளங்களில் பணியாற்றும் அனைவரும் சமூக பொறுப்பை, தனிநபர் கட்டுப்பாட்டை உணர்ந்து கருத்துக்களை பதிவிட வேண்டும்.

அவர்கள் தங்களை நீதிபதிகளாகவும், ஆசிரியர்களாகவும், நாட்டாண்மைகளாகவும் கருதும் போது தங்களின் பொறுப்புணர்வை மீறி விடும் அபாயம் உள்ளது.

‘ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இது நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சகட்டுமேனிக்கு வார்த்தைகளை கொட்டும் இடங்களாக சமூக இணைய தளங்கள் மாறி விடக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ” பேசினால் நல்லதை பேசுங்கள் ; இல்லாவிடில் மெளனமாக இருந்து விடுங்கள் ” என அறிவுறுத்தினார்கள். பல நேரங்களில் மெளனம் மரியாதையை பெற்று தரும்.

கர்ம வீரர் காமராஜர் அவர்கள் ” பேச்சு என்பது வெள்ளிக் கட்டியை போல என்று கூறிவிட்டு, மெளனம் என்பது தங்க கட்டியை போல ” என்று கூறினார்.

இன்று ஒருவரின் குணாதிசயத்தை அறிய அவரின் சமூக இணையதள பதிவுகள் அளவு கோலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

யதார்த்தவாதிகள், வெறித்தனம் உள்ளவர்கள்,பொறுமையற்றவர்கள், நன்றி மறப்பவர்கள், நடிப்பவர்கள், நலன் விரும்பிகள், நல்ல எண்ணம் கொண்டவர்கள், முதிர்ச்சியானவர்கள் என அவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

சிலர் பதிவிடும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட நன்மதிப்பை மட்டுமல்ல. அவர்களின் குடும்ப பின்னணி, அவர்கள் சார்ந்த அமைப்பு, அவர்கள் சார்ந்த சமூகம் ஆகியவற்றின் நன்மதிப்பையும் சேர்த்து பாதித்து விடுகிறது.

இன்னும் சிலரின் பொறுப்பற்ற கருத்துக்கள் நடுநிலையாளர்களைக் கூட பகையாளிகளாக்கிவிடும் அபாயத்தை செய்து விடுகிறது.

இதில் கட்டுப்பாடற்ற சுதந்திரம் காரணமாக யார், யாரை கட்டுபடுத்துவது என்றே தெரியவில்லை. சிலரின் உணர்ச்சிகரமான போக்கு அறிவைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.

அதன் விளைவாக பொறுப்புணர்வுள்ள தலைவர்கள், அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் எடுக்கும் முயற்சிகள் நாசமாகி விடுகிறது.

முதிர்ச்சியுடன் செயல்படாத போது தோல்விகளும் உறுதியாகிவிடுகிறது.

இன்றைய கால கட்டத்தில் எதிரிகள், சமூகவிரோதிகள் ஆகியோரின் கருத்துக்களை ஆக்கப்பூர்வமான முறையில் எதிர்கொள்வதே அறிவுசார்ந்த நடவடிக்கையாக இருக்கமுடியும்.

நம் மீது பழி விழும்போது கூட நாம் கோபப்படாமல் நிதானத்துடன் அதை முறியடிக்க வேண்டும்.

‘கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்பவரே வீரர்’ என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளில் ஒன்றாகும்.

இன்று மதவெறியர்கள், சாதி வெறியர்கள், சமூகவிரோதிகள் எல்லோரும் சமூக இணையதளங்கள் மூலம் பரப்பும் மக்கள் விரோத கருத்துக்களை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் உலகம் இருக்கிறது.

இவர்களுக்கு எதிராக களம் இறங்க விரும்பும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு புத்திசாலித்தனமும், பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியம்.

எதிராளிகள் செய்யும் அதே தவறை இவர்களும் செய்து விடக்கூடாது. பிறர் முகம் சுளிக்காமல் வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட வேண்டும்.

அவ்வாறு தங்களால் செயல்பட முடியாத பட்சத்தில் ஆக்கப்பூர்வமான முறையில் வரும் பிறரின் கருத்துக்களை பகிர முயலவேண்டும். அல்லது மௌனமாக இருக்கவேண்டும.

வீணாண விவாதங்கள் வெற்றிகளை தராது. அது வெறுப்பையே வளர்க்கும்.

புனித பைபிளில் வரும் ஒரு வசனம் கவனிக்கத்தக்கது.

” அன்பையும், ஆன்மாவையும் இழந்து விட்டு, விவாதங்களை வென்று என்ன பயன்? (மார்க் 8:36 )

இந்த கருத்து எவ்வளவு மேன்மையான செய்தியை கூறுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

புனித குர்ஆனில் வரும் பின்வரும் அறிவுரை கூர்ந்து சிந்திக்கத்தக்கது.

‘விவேகத்துடனும், அழகிய வார்த்தைகளைக் கொண்டும் விவாதியுங்கள்’ (2:125) என்ற கருத்து மனிதர்களுக்கு சொல்லப்பட்ட பண்பான போதனையாகும்.

இது போன்றே பல மதங்களின் புனித நூல்களும் மக்களை நோக்கி அறிவுறுத்துவதை அறிகிறோம்.

எனவே,எந்தக் கருத்தையும் நல்ல வார்த்தைகளில், நாகரிகத்தோடு சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.

அது போல் மாற்று கருத்துகள் கூறும் நபர்களையும் , அவர்களின் பின்னணிகளையும் ஆராய வேண்டும். நல்ல எண்ணத்துடன் கூறும் மாற்றுக் கருத்துகளை மதிக்க வேண்டும்.

நண்பர்களாக இருப்பவர்கள் புரிதலின்றி ஒரு கருத்தை கூறி விட்டால், அவர்களுக்கு பக்குவமாக விளக்க வேண்டும்.

நல்லவர்களையும், விஷமிகளையும் ஒன்றாக பார்க்க கூடாது.

நாம் கூறும் ஒரு கருத்து எதிரிகளையும் சிந்திக்க வைக்க வேண்டும். சீண்டி விட்டு விடக் கூடாது.

நடுநிலையாளர்களை சரியான திசையில் செயல்பட வைக்கவேண்டும்.

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய்கவர்ந் தற்று “என திருக்குறள் கூறுகிறது.

இனிய சொற்களைப் பயன்படுத்தாமல் கடுமையான சொற்களை பயன்படுத்துவது பழங்களை விட்டுவிட்டு காய்களை உண்பது போல என திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.

எனவே, வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுபவர்கள் மிகுந்த நிதானத்தோடும், சமூக பொறுப்புணர்வோடும் கருத்துக்களை பதிவிட முன்வர வேண்டும்.

ஒருவரை, ஒரு குழுவை அல்லது ஒரு இனத்தை ஒழிக்க வேண்டும் என்ற கொடூர உணர்வோடு, ஃபாஸிஸ போக்கோடு செயல்படுபவர்கள் தங்களை பொது நலன் கருதி திருத்திக் கொள்ள வேண்டும்.

பொய், வதந்தி, அவதூறு, பிரிவினைப்போக்கு, மோதல், பிறரிடம் பேசுவதை ரகசியமாக பதிவிட்டு பரப்புவது, ஆகியவற்றை முன்னிறுத்துபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

‘இருளை பழிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வையுங்கள்’ என்றார் அரிஸ்டாட்டில்!

இதை வலைதளங்களில் செயல்படுபவர்கள் புரிந்துகொண்டு பணியாற்ற வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 401 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே