காங்கிரஸில் இருந்து விலகிய நடிகை குஷ்பு நேற்று டெல்லி சென்று பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் சென்னை வந்த அவர் தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தாமரை ஒவ்வோர் இடத்திலும் மலர வேண்டும் என்ற ஆசையில் பாஜகவில் இணைந்துள்ளேன்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது கொள்கை என்றார்.

தொடர்ந்து பேசிய அவரிடம் ஒரு செய்தியாளர், கடந்த காலத்தில் இலங்கை தமிழர்கள் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டீர்கள் தற்போது உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு நான் அதே நிலைப்பாட்டில் உள்ளேன் என்று கூறினார்.

பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர். அதை தான் நான் விரும்புகிறேன். 

ஆனால் அவர் எல்லா கருத்துக்களையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன் என குஷ்பு கூறினார்.

தொடர்ந்து பேசிய குஷ்பு, நேற்று முதல் காங்கிரஸ் கட்சியினர் ரூ.2 தந்து எனக்கு எதிராக ட்வீட் போடச் செய்யும் வேலையை தொடங்கிவிட்டனர்.

ஓரிடத்தில் இருக்கும் வரை அந்த இடத்துக்கு விசுவாசம் காட்ட வேண்டும். அதன் அடிப்படையில் 5ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றேன்.

ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சியின் கொள்கை.

எதிர்க்கட்சியில் இருந்தால் எதிர்த்து தான் ஆக வேண்டும். பா.ஜ.க நிறைவேற்றிய அனைத்து திட்டங்களையும் தொடங்கியது காங்கிரஸ் தான்.

அப்போது, உங்கள் கணவர் சுந்தர்.சி அழுத்தத்தில் தான் நீங்க பாஜகவில் சேர்ந்ததாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த குஷ்பு, என் கணவர் கூறியெல்லாம் நான் பாஜகவில் சேரவில்லை.

இப்படி பேசுவதெல்லாம் கேவலமான புத்தி.

பிற கட்சியில் இருந்து விலகி வேறு யாரும் காங்கிரசில் சேரவில்லையா? திருநாவுக்கரசரே வேறு கட்சியில் இருந்து வந்தவர் தானே.

காங்கிரஸில் இருந்து நான் பேசியதெல்லாம் மனசாட்சி இல்லாமல் பேசியது தான்.

பாஜக ஆட்சியில் ஒரு மீனவராவது உயிரிழந்துள்ளாரா? என்ற அவர், பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறியதால் தான் எனக்கு காங்கிரசில் பல பிரச்சனைகள் வந்தன. நல்லது செய்வதால்தான் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே