மகாராஷ்டிராவின் பர்பணி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்: புனேவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கரோனா பரவலை தடுக்க மகாராஷ்டிராவின் பர்பணி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. புனேவில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களாக மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் நேற்று முன்தினம் 14,317 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,07,307 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பரவலை தடுக்க 15-ம்தேதி முதல் நாக்பூரில் முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது. பர்பணி மாவட்டத்தில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அந்த மாவட்டம் முழுவதும் முழுநேர ஊரடங்கு அமல் செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கூறும் போது, “பர்பணி மாவட்டம் முழு வதும் சனிக்கிழமை அதிகாலை முதல் 3 நாட்கள் முழுஊரடங்கு அமல் செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

புனே மாநகராட்சி ஆணையர் சவுரப் ராவ் கூறும்போது, “புனேவில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது. வரும் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. எனினும் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் சில தளர்வுகள் அளிக்கப்படும். இரவு 10 மணிக்கு மேல் ஓட்டல்கள் திறந்திருக்கக் கூடாது. ஓட்டல்கள், வணிக தலங்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். திருமணம், இறுதிச் சடங்கில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம். கிளப் விடுதிகள் அனைத்தும் மூடப்படும்” என்றார்.

மகாராஷ்டிராவின் ஜல்கோன், அவுரங்காபாத் உள்ளிட்ட பகுதி களிலும் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன.

போட்டித் தேர்வு ரத்து

தலைநகர் மும்பையில் கடந்த 2 மாதங்களில் 90 சதவீத அளவுக்கு கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. எனவே மும்பை யிலும் முழு ஊரடங்கு அல்லது இரவு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மகாராஷ்டிர அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

மும்பையில் நடைபெறும் திருமணத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதை மீறி மும்பையின் கல்யாண் பகுதியில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற திருமணத்தில் 700 பேர் பங்கேற்றனர். இதுதொடர்பாக திருமண விழாவை நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில தேர்வு வாரியம் சார்பில் வரும் 21-ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் போட்டி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

23,285 பேருக்கு தொற்று

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 23,285 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், 1,97,237 பேர் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 14,317 பேர், கேரளாவில் 2,133 பேர், பஞ்சாபில் 1,305 பேர், கர்நாடகாவில் 783 பேர், குஜராத்தில் 710 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கரோனா நோயாளிகளில் 54.40 சதவீதம் பேர் மகாராஷ்டிராவில் உள்ளனர்.

கேரளாவில் 17.28%, பஞ்சாபில் 5.11%, கர்நாடகாவில் 3.96%, தமிழகத்தில் 2.2%, இதர மாநிலங்களில் 17.06% பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 45 வயதுக்கு உள்பட்ட நாள்பட்ட நோயாளி களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. அடுத்த கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவில் இருந்து இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானும் இணைகிறது. உலகளாவிய அளவில் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகம் செய்ய ஜி.ஏ.வி.ஐ. என்ற அமைப்பு செயல்படுகிறது. அந்த அமைப்பின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1.6 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ளன

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே