மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று முடிவு..!!

மகாராஷ்டிராவில் இன்று இரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்றிரவு 8 மணிக்கு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனாவால் பாதிக்கப்படுவதில் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று மாநிலத்தில் புதிதாக 62,097 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் இதுவரை 39.6 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் 519 பேர் பலியாகினர்.

இந்நிலையில் மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அமைச்சர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே, “மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று இரவு அறிவிப்பார். முழு ஊரடங்கை அமல்படுத்துமாறு நாங்கள் முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளோம். அன்றாடம் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும் சமாளிக்க முடியவில்லை. அதனாலேயே முழு ஊரடங்கை அமல்படுத்த நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இது குறித்த முடிவை முதல்வர் அறிவிப்பார்.

அதேபோல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக இதுவரை எந்த ஒரு கடிதமும் வரவில்லை. இருப்பினும், தடுப்பூசி திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும் ” என்றார்.

முன்னதாக, நேற்றிரவு பேசிய பிரதமர் மோடி, கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முழு ஊரடங்கு என்பது மாநில அரசுகளின் கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே