குழந்தைகளை இழந்த சோகத்தில் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

வேலூர் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசுக்கடை தீ விபத்தில் பலியான 2 பிள்ளைகளின் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், லத்தேரி பேருந்து நிலையம் அருகே மோகன் ரெட்டியார்(60) பட்டாசுக்கடை நடத்தி வந்தார்.

அவரது மகள் வித்யாலட்சுமி (33). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த சுரேஷ்(40) என்பவருக்கும் திருமணம் நடந்து, இவர்களுக்கு தனுஜ்(8), தேஜஸ்(6) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக வித்யாலட்சுமி, கணவரைப் பிரிந்து, மகன்களுடன் லத்தேரியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசுக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

அப்போது கடையில் இருந்த மோகன் ரெட்டியார், அவரது பேரன்களான தனுஜ், தேஜஸ் ஆகிய 3 பேரும் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி இறந்தனர்.

தந்தை மற்றும் மகன்கள் இறந்த விரக்தியில் இருந்த வித்யாலட்சுமி, புதன்கிழமை அதிகாலை லத்தேரி ரயில் நிலையம் அருகே அவ்வழியே சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே