முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87.

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

அவரது மனைவி ஏற்கனவே காலமான நிலையில், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.என்.சேஷன் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே நேற்று இரவு 9.45 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

இதுகுறித்து டி.என்.சேஷனின் உறவினர் ஸ்ரீவித்யா கூறுகையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு டி.என்.சேஷனின் உயிர் பிரிந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் சேஷனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை ஆர்.ஏ.புரம் சென்மேரிஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு மேல் பெசன்ட்நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே