பாஜகவின் முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
வாஜ்பாய் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், சந்திர சேகரின் அரசில் மத்திய நிதியமைச்சராகவும் இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா.
பீகாரைச் சேர்ந்த சின்ஹாவுக்கு வயது 83, இவர் ஐஏஎஸ் அதிகாரியாக 24 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
பின்னர் பாஜகவின் தேதிய துணைத் தலைவராகவும் இருந்தார். 2018-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இருந்தே வெளியேறினார்.
இந்நிலையில் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்த யஷ்வந்த் சின்ஹா, மேற்குவங்க தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கோல்கட்டாவில் சுதிப் பானர்ஜி, டேரீக் ஓ பிரையன், சுப்ரதா முகர்ஜி முன்னிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் யஷ்வந்த் சின்ஹா இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அடல் ஜி காலத்தில் கருத்தொற்றுமையில் பா.ஜ.க. நம்பிக்கை கொண்டிருந்தது.
ஆனால், இன்றைய அரசு அழிப்பதிலும், வெற்றி பெறுவதிலும் நம்பிக்கை கொண்டுள்ளது. பா.ஜ.க.வில் இருந்து அகாலிகள், பிஜு ஜனதா தளம் வெளியேறி விட்டது.
இன்று பா.ஜ.க.வுடன் யார் நிற்கின்றனர்?. நந்திகிராமில் மம்தா ஜி மீது நடந்த தாக்குதலே அக்கட்சியில் இணைவதற்கு அடிப்படையாக அமைந்தது.
அந்த தருணத்தில், திரிணாமுல் காங்கிரசில் இணைந்து மம்தா ஜிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என முடிவானது எனவும் கூறினார்.