முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வு நடத்துவது ஏற்புடையதல்ல – டிடிவி தினகரன்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வு நடத்துவது ஏற்புடையதல்ல என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது.

அதேபோன்று, மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவக் கல்விக்கும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர் போன்ற 11 கல்லூரிகளில், 2021-ல் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த (INI CET EXAM) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (நவ. 17) தன் ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வு (INI CET EXAM) நடத்துவது ஏற்புடையதல்ல.

நீட் தேர்வு மூலம் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை தன்னிச்சையாக பங்கு போட்டு கொடுக்கும் மத்திய அரசு, இதில் மட்டும் இப்படி ஓர் ஏற்பாட்டினை செய்வது கொஞ்சமும் நியாயமற்றது.

மாநில உரிமைகளை நசுக்கி மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முடிவுகள் வரலாற்றுப் பிழையாகிவிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே