ரயில்கள், ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம்..!!

டெல்லி: ரயிலில் பயணிக்கும் பயணிகள், ரயில் நிலையத்துக்குள் வருவோர் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 வரை வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு அடுத்த 6 மாதங்களுக்கும் அல்லது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று ரயில்வே துறை கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது.

இந்தியாவில் தினமும் 2,00,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 80% பாதிப்புகள் உள்ளன.

கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் 15 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கொரோனாவை முழுமையாக ஒழிக்க வேண்டுமானால் பொதுமக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு முறைகளில் அஜாக்கிரதையாக இருப்பதால் இதனை கடைபிடிக்காத மக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரயிலில் பயணிக்கும் பயணிகள், ரயில் நிலையத்துக்குள் வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

இல்லாவிட்டால் ரூ.500வரை வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய ரயில்வே துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- ரயில்களில் பயணிக்கும் பயணிகளும், ரயில்நிலையத்துக்குள் வரும் பயணிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் ரயில்நிலையத்துக்குள்வரும் பயணிகள், உடன் வருவோர், மற்றும் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில்வே சட்டத்தின்படி ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் ரயில்களை அசுத்தப்படுத்துதல், ரயில்நிலையங்களில், ரயிலில் எச்சில் துப்புதல் தடை செய்யப்படுகிறது.

இந்த உத்தரவு அடுத்த 6 மாதங்களுக்கும் அல்லது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று ரயில்வே கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே