குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குற்றால அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் தொடர் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக இன்று அதிகாலை அங்கு பெய்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தேனி மாவட்டம் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான இந்த அருவியில் குளிக்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே