பூமியில் ஒரு சொர்க்கபுரியாக திகழும் துபாய்க்கு மேலும் ஒரு மகுடம் சூட்டும் வகையில் அச்சு அசலாக நிலவை போன்ற தோற்றத்துடன் கூடிய பிரம்மாண்ட சொகுசு விடுதி கூடிய விரைவில் வரவுள்ளது.

ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்து இன்று செல்வ சீமான்களின் கோட்டையாக மாறியிருக்கும் நகரம் துபாய். பல நூறு அடுக்குமாடிகளை கொண்ட பிரம்மாண்ட கட்டிடங்கள், கண்ணை கவரும் கேளிக்கை விடுதிகள், தேவலோகத்தையும் மிஞ்சும் நட்சத்திர ஹோட்டல்கள் என பூமியில் ஒரு சொர்க்கமாக துபாய் மின்னி வருகிறது.

அப்படிப்பட்ட துபாய் என்ற தங்க கிரீடத்தில் விலைமதிப்பற்ற வைரக் கல் பதித்தால் எப்படி இருக்கும்? அப்படிதான் இருக்கப் போகிறது நிலவு சொகுசு விடுதி.

ஆம்.., துபாயில் நிலவை போன்ற மிகவும் பெரிய சொகுசு விடுதி ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டின் ‘மூன் ஓல்டு ரிசார்ட்ஸ்’ (Moon World Resort Inc.,) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

5 பில்லியன் டாலர் செலவில்

உண்மையிலேயே நிலவை தரையில் இறக்கினால் எப்படி இருக்குமோ, அதே போலவே இந்த சொகுசு விடுதி கட்டப்படவுள்ளது. இதன் மொத்த உயரம் 735 அடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று முதல்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 39 ஆயிரத்து 838 கோடி ரூபாய். இந்த விடுதியில் ஆடம்பரக் குடியிருப்புகளும், ஸ்பா, இரவு விடுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இங்கு வரவுள்ளன.

சகல வசதிகள்…

10 ஏக்கரில் அமையவுள்ள இந்த விடுதியில் வெல்னஸ் சென்டர், நைட் கிளப், 300 ஸ்கை வில்லா குடியிருப்புகள், ஓட்டல் அறைகள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், வணிக வளாகங்கள், 5d திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவையும் இங்கு அமைக்கப்படவுள்ளன. இந்த விடுதியை சுற்றிலும் நிலவின் மேற்புறத்தை போலவே காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.

எப்போது வரும்?

தற்போது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், இந்த நிலவு சொகுசு விடுதி துபாயில் எந்தப் பகுதியில் அமையப் போகிறது என்பது தான் தெரியவில்லை. இதற்கான அனுமதி கிடைத்தவுடன், 48 மாதங்களில் இதன் கட்டுமானத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலவு சொகுசு விடுதி கட்டி முடிக்கப்பட்டால், ஆண்டுதோறும் 1 கோடி பேர் வரை இங்கு வந்து செல்வார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.8 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்ட முடியும் எனக் கூறப்படுகிறது.

துபாய்க்கு மற்றுமொரு மகுடம்

ஏற்கனவே, துபாய் நகரம் உலகின் மிக ஆடம்பரமான அழகான நகரம் எனப் புகழப்படுகிறது. மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா (உயரம் 829.8 மீட்டர்) துபாயில் தான் உள்ளது. இப்போது இந்த நிலா விடுதியும் வந்துவிட்டால் மற்றுமொரு ஆச்சரியமாக இதுவும் சேர்ந்து கொள்ளும் என்பதில் சிறிது கூட ஐயமில்லை. தற்போது இந்த சொகுசு விடுதியின் மாதிரி வடிவம் கணிணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனிடையே, மொத்தம் நான்கு பிரம்மாண்ட நிலா விடுதிகளை அமைக்க ‘மூன் ஓல்டு ரிசார்ட்ஸ்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, துபாய் மட்டுமல்லாமல் வட அமெரிக்கா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றிலும் நிலா விடுதியை கட்ட முடிவு செய்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே