பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதில், 20 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் போ காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.0-ஆக பதிவானதாகவும், நிலநடுக்கத்தின் மையம் ஹர்னாய் அருகே 20 கி.மீ. (12 மைல்) தொலைவில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையான பலுசிஸ்தான் முழுவதும் உள்ள நகரங்களில் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக, நகரத்தின் புறநகரில் உள்ள சுரங்கத்தில் சுமார் 15 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட ஹர்னாய் பகுதி மலைப்பகுதி என்பதால், அங்கு நடைபாதை சாலைகள், மின்சாரம் இல்லாததாலும் மீட்புப் பணிகளுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த 20 பேரில் ஒரு பெண்ணும், ஆறு குழந்தைகள் என்றும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஹர்னாயில் உள்ள மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கைகால்கள் முறிந்த நிலையில் இருந்தனர். குறைந்தது 40 பேர் மோசமான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்”.
2015 இல், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர்.
2005 இல், ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீரில், 73 ஆயிரத்துக்கம் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 3.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
1935 இல் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பிரிட்டிஷ் ஆளும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த குவெட்டாவில் சுமார் 30,000 பேர் இறந்தனர்.