இசையமைப்பாளர் அனிருத் மீது திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் குற்றஞ்சாட்டு..!!

ரஜினியின் தர்பார் படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்த அனிருத், தமிழ் இசை கலைஞர்களை பயன்படுத்தாமல் புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாகிறது.

அனிருத் மற்றும் தேவா இசையில் நடிகர் ரஜினியின் தர்பார் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் சும்மா கிழி கிழி என்று பட்டயை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

லைக்கா நிறுவனமும் தினம் ஒரு தர்பார் முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகின்றது.

இந்நிலையில் தர்பார் படத்தில் உள்ளூர் இசைக் கலைஞர்களுக்கு குறைந்தளவே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவர் தினா, பெரிய நடிகரின் படத்திலேயே உள்ளூர் இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது வருத்தமளிப்பதாக கூறினார்.

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படத்திற்கு வெளிநாட்டில் உள்ளவர்களை வைத்து பணி செய்தால், தாங்கள் என்ன செய்வது என கேள்வி எழுப்பியுள்ள தினா, அனிரூத் போன்றவர்கள் இந்த தவறை செய்திருக்க கூடாது என்றும்; அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே