பெரியார் என்றாலே அவரது தாடியும், கைத்தடியும் தான் நம் அனைவரது நினைவுக்கும் வரும்.
பெரியார் எதற்காக தாடி வைத்திருக்கிறார் என்பது பற்றி அவரது நண்பர்கள் வட்டத்தில் எழுந்த விவாதத்திற்கு சிந்திக்கும்படியும், சிரிக்கும்படியும் பெரியாரே பல்வேறு சுவையான பதில்களை அளித்துள்ளார்.
அந்த சுவாரஸ்யமான நிகழ்வின் தொகுப்பு இதோ;
ஒரு நாள் இரவு பெரியார் வீட்டு மாடியில் அவரது நண்பர்கள் ”அய்யா தாடி வளர்ப்பது ஏன்” என்று தங்களுக்குள் ஒரு சிறு பட்டிமன்றம் நடத்தினர். முக அழகுக்காக தாடி வளர்ப்பதாக என்னிடம் பெரியார் சொன்னார் என்றார் மாயவரம் நடராசன். எஸ்.வி.லிங்கம் என்பவரோ, இல்லையில்லை ரஷ்ய அறிஞர்கள் எல்லோரும் தாடி வைத்துள்ளனர். அவர்களைப் பார்த்தபின் வைத்தேன் என்று என்னிடம் கூறினார் என்றார்.
பெரியார் பதில்கள்
உடனே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், சவரச் செலவு தினமும் நாலணா மிச்சமாகிறது என்றாரே என்னிடம் என்றதும், பட்டுக்கோட்டை அழகிரி, கொஞ்ச நேரம் என்றாலும் இன்னொருவரிடம் தலைகுனிந்து உட்காருவது தன்மானக் கேடாக உள்ளது என்றாரே என்னிடம் என்றார். மேடைஏறி பலரைத் தாக்கித் திட்டும்போது, போனால் போகிறான் கிழவன், வயதானவன் என்று விட்டுவிடுவார்கள் என்று என்னிடம் கூறினாரே என்றார் பூவாளூர் பொன்னம்பலனார்.
பெரியார் கூறியது
இப்படியாக ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த கி.ஆ.பெ.விசுவநாதம், இப்போது உறங்குகள் உண்மையான காரணத்தை நாளை பெரியாரிடமே கேட்டுச் சொல்கிறேன் என்றார். மறுநாள் சொன்னபடி சென்று அவரது தாடி வளர்ப்பின் ரகசியம் குறித்து கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த பெரியாரோ, தினமும் பத்து நிமிடம் வீதம் மாதம் 300 நிமிடங்கள் வீணாகிறதே. பல நல்ல காரியங்களை இந்த நேரத்தில் செய்யலாமே என்று நினைத்து விட்டு விட்டேன். அது தானாக வளர்ந்துவிட்டது. வேறெதுவும் காரணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
செலவு மிச்சம்
இதனிடையே ஒரு முறை ரயில் நிலையத்திலிருந்து பெரியார் வெளியே வந்த போது எதிரில் அவரை சந்தித்த ஒருவர், அய்யா நீங்கள் ஏன் தாடி வைத்துள்ளீர்கள் என்று கேட்டிருக்கிறார், அதற்கு எனக்கு பிளேடு செலவு மிச்சம், நான் தாடி வளர்ப்பதால் உனக்கு என்ன நஷ்டம் என்று வினவியுள்ளார். பெரியாரை பொறுத்தவரை எதையுமே முற்போக்காக சிந்திக்கக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.