முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு..!!

பெரியாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பெரியாரின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சனில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, ஆவடி நாசர், மு.பெ.சாமிநாதன், மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து இராணுவ மைதானத்தில் நடந்த நிகழ்வில் சமூகநீதி நாளை முன்னிட்டு 5 உறுதிமொழிகளை ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உறுதிமொழியேற்பு நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறைகளின் செயலாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன் என்று முதல் உறுதிமொழியை ஏற்றார் முதலமைச்சர். சுயமரியாதை ஆளுமை திறனும் பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் என 2வது உறுதிமொழியும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன் என 3வது உறுதிமொழியும் ஏற்றார்.

மானுட பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும் எனவும் சமூகநீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன் என்றும் முதலமைச்சர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே