புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி புராரி திடலில் நான்காவது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தில்லியினுள் விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் எல்லைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘தில்லி செல்வோம்’ என்ற பெயரில் ஹரியாணா வழியாக தில்லி நோக்கி வந்த விவசாயிகள் மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து புராரி திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹரியாணா, உத்தரப்பிரதேசம் போன்ற அண்டை மாநில விவசாயிகளும், போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களுடன் நேற்று (சனிக்கிழமை) தில்லி நோக்கி வாகனங்களில் அணிவகுத்து வந்தனர்.

எனினும் அவர்கள் தில்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இனிமேல் தில்லி நோக்கி வரும் விவசாயிகளுக்கு அனுமதியில்லை என்று எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

எனினும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை சொந்த ஊர்களுக்குச் செல்லப்போவதில்லை என்று விவசாயிகள் எல்லையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புராரி எல்லையில் நான்காவது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், எல்லைப் பகுதிகளிலும் உணவினை சமைத்து உண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

எனினும் ஏராளமான விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய விவசாயப் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்படவில்லை.

எனினும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே