மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது.

போராட்டத்துக்கு எதிா்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் ஆதரவு தெரிவித்துள்ள சூழலில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் போராட்டத்துக்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபி பல்கலைக்கழகங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் என அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன. 

இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் மாநில உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளில் போராட்டம் நடைபெற்றதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கடையடைப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

குஜராத்தின் மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் போராட்டக்காரர்கள் டயர்களை கொடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத் – வீரம்கம், வதோரா தேசிய நெடுஞ்சாலை, பரூச் – தஹேஜ் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களை கைது செய்து, அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்.

தமிழகத்தில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் தங்களது கடைகளில் பச்சைக் கொடி ஏற்றியுள்ளனர்.

திருப்பூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில் முழுகடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

முழு அடைப்பு காரணமாக கடைகள் திறக்கப்படவில்லை.

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் சட்டங்கள் உள்ளதாக அவா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

விவசாயிகளின் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

இதுவரை 5 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ள போதிலும், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை டிசம்பா் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

விவசாயிகள் எழுப்பும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், புதிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

ஆனால், மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்பதை மட்டுமே விவசாய சங்கங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

சட்டங்கள் குறித்து வேறு எந்தவிதப் பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடுவதற்குத் தயாராக இல்லை என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சாா்பில் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜவாதி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சிவசேனை, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அகில இந்திய மோட்டாா் வாகனங்கள் சங்கம் (ஏஐஎம்டிசி), அகில இந்திய ரயில் ஊழியா்கள் கூட்டமைப்பு (ஏஐஆா்எஃப்) உள்ளிட்டவையும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சோனம் கபூா் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே