டெல்லியில் JNU மாணவர்கள் மீண்டும் போராட்டம்…!

உயர்த்தப்பட்ட விடுதி கட்டணத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர்.

எந்தவித அறிவிப்பும் இன்றி விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்தி, ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இன்று நாடாளூமன்றத்தை நோக்கி அமைதிப்பேரணி நடத்த திட்டமிட்டனர்.

இதை அறிந்த டெல்லி போலீசார் பல அடுக்கு பாதுகாப்புகளை ஏற்பாடு செய்து, அவர்களை தடுக்க முற்பட்டனர்.

ஆனாலும் பேரணிக்கு புறப்பட்ட மாணவர்கள், மூன்றடுக்கு பாதுகாப்பை தாண்டிச் சென்றனர்.

அதன்பின்னர் போலீசாரால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.  

மாணவர்களின் போராட்டத்தால் மிக முக்கியமான 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

காயமடைந்தவர்களை மீட்ட சக மாணவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

போலீசார் விரட்டியதை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் பலர் தடியடிக்கு அஞ்சி ஓடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

மாணவர்களின் போராட்டம் தொடரும் நிலையில், அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் டெல்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அங்கு இருதரப்புக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு என பதற்றமான சூழல் நீடிக்கிறது.

ஆனால் என்ன நடந்தாலும் கட்டண உயர்வை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் என மானவர்கள் அறிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே