மத்திய வேளாண் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு..!!

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாபிலிருந்து ஹரியாணா வழியாக தில்லி அடையும் விவசாயிகளின் பேரணியை கடந்த வியாழக்கிழமை பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தடுப்புகளை அமைத்தும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விவசாயிகளை கலைத்தனர்.

எனினும் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி விவசாயிகள் தில்லி நோக்கி முன்னேறினர்.

இதனிடையே விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியதைத் தொடர்ந்து தில்லியில் நுழைவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

காவல்துறையினர் அளித்த தகவலின்படி புராரி திடலில் பாரதிய கிசான் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு தயாராக உள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

வேளாண் அமைச்சர் அவர்களை டிசம்பர் 3 ம் தேதி கலந்துரையாட உள்ளார் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, “பல இடங்களில், இந்த குளிரில் விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் மற்றும் ட்ரோலிகளுடன் நெடுஞ்சாலைகளில் தங்கியுள்ளனர்.

தில்லி காவல்துறை உங்களை பெரிய மைதானத்திற்கு மாற்ற தயாராக உள்ளது என்று நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தயவுசெய்து அங்கு செல்லுங்கள். அங்கு நிகழ்ச்சிகளை நடத்த உங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “விவசாயிகளின் பிரச்னை மற்றும் தேவை குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது” என அமித்ஷா தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே