டெல்லியில் விவசாயிகள் இன்று முதல் உண்ணாவிரத போராட்டம்..!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் ஹரியாணா, உ.பி. எல்லையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் தனியாக நடக்கும் அதேவேளையில், 11 விவசாயிகள் உ.பி., ஹரியாணா, டெல்லி எல்லையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் யோகேந்திர யாதவ் நேற்று கூறுகையில், ‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக திங்கள்கிழமை ஒருநாள் விவசாயிகள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் நடத்துகின்றனர்.

சிங்கு எல்லை உள்ளிட்ட பகுதியிலிருந்து முதலில் 11 விவசாயிகள் உண்ணாவிரதத்தைத் தொடங்குவார்கள்.

அதன்பின் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள்’ எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம் தீவிரமானதையடுத்து, டெல்லி போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர்.

ட்விட்டரில் டெல்லி போலீஸார் விடுத்த அறிவிப்பில், ‘சிங்கு, அச்சண்டி, பியா மணியாரி, மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

ஆதலால் வாகன ஓட்டிகள் லாம்பூர், சாபியாபாத் சாபோலி, சிங்கு ஸ்கூல் ரோடு வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.

மக்கள் ரிங்ரோடு, என்ஹெச் 44 சாலையைப் பயன்படுத்த வேண்டாம். முகார்பாவிலிருந்து போக்குவரத்து ஜிடிகே சாலைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

ஹரியாணா செல்பவர்கள் ஜாரோடா வழியாக, தவுராலா, கப்ஷேரா, பதுஷாரி, ராஜோக்ரி, பிஜ்வாஸன், பஜ்கேரா, பாலம் விஹார், துந்தேஹேரா வழியாகச் செல்ல வேண்டும். திக்ரி, தன்ஹா எல்லைகள் மூடப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை ஹரியாணாவிலிருந்து செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி வரி வசூலிப்பதைத் தடை செய்யும் போராட்டத்தை நடத்த உள்ளனர்.

இந்த 3 நாட்களிலும் ஹரியாணாவில் எந்தச் சாவடியிலும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கமாட்டோம் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே