போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ் பட நடிகை ராகினி திவேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் 2-வது கதாநாயகியாக நடித்தவர் ராகினி திவேதி. ஆர்யன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அர்ஜுன் ஜோடியாக மெய்காண் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகவில்லை.

கன்னடத்தில் சங்கர் ஐ.பி.எஸ், கெம்பே கவுடா, வில்லன் பங்காரி, சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ராகினி தற்போது போதை பொருள் பதுக்கல் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

சமீபத்தில் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்ற டி.வி. நடிகை அனிகா உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் கன்னட திரையுலகினர் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் போதை பொருட்களை அவர் விற்று வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷும் கன்னட சினிமாவில் போதை பொருள் பழக்கம் இருப்பது உண்மைதான் என்றார். போதை பொருள் பயன்படுத்தும் 16 பேரின் பட்டியலையும் போலீசில் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் நடிகை ராகினியின் நெருக்கமான நண்பர் ரவி என்பவரை போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகை ராகினி திவேதிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் நேற்று காலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே நடிகை ராகினி தரப்பில் ஆஜரான வக்கீல், சொந்த பிரச்சனை, உடல் நலக்குறைவு காரணமாக வருகிற 7-ந் தேதி நடிகை ராகினி திவேதி விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் வழங்கும்படி போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் போதை பொருள் தடுப்பு போலீசார் அஞ்சுமாலா தலைமையில் காலை 6.30 மணிமுதல் காலை 10மணிவரை நடிகை ராகினியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அவரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு ராகினியிடம் போதை பொருள் தடுப்பு உதவி ஆணையாளர் சந்தீப் பாட்டீல் விசாரணை மேற்கொண்டார்.

இதனிடையே கன்னட நடிகையும், தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணியும் போதை பொருள்விவகாரத்தில் சிக்கி உள்ளார். அதற்கு காரணம் ராகினியின் நண்பர் ரவிசங்கர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலமே ஆகும் .

அவரது வாக்குமூலத்தை வைத்து சஞ்சனாவின் ஆண் நண்பர் ராகுலை போலீசார் கைது செய்தனர் .

அதில் அவர் சஞ்சனாவுடன் பல்வேறு மதுபான விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டோ ஆதாரங்கள் கிடைத்தது .

இதை வைத்து சஞ்சனாவை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

ஆனால் தனக்கு கொரோனா இருப்பதாக அவர் கூறியதால் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

பாலிவுட்டில் தொடங்கி, சாண்டல்வுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள போதைப்பொருள் விவகாரம், கோலிவுட்டையும் பதம் பார்க்கும் என்று கூறுகிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே