கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில், மேலும் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

இதன்படி பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப். 15ல் ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தபடுத்தப்பட்டது.

வரும் 14ம் தேதி ஊரடங்கு முடிவடைய உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது மக்களின் சிரமங்களை தவிர்க்க வாபஸ் பெறப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் 20 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயாரித்துள்ளது.

அதில், கூறியிருப்பதாவது:

கடந்த 2009ம் ஆண்டு எச்1என்1 வைரஸ் பரவியது போலவே கொரோனா வைரசும் வேகமாக பரவி வருகிறது.

மக்கள் தொகை அதிகம் உள்ளதால், வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. அதேநேரம், அனைத்து பகுதியிலும் சமமாக பரவ வாய்ப்பு குறைவு.

எனவே, ஒவ்வொரு பகுதியையும் வெவ்வேறு முறையில் அணுக வேண்டியுள்ளது.

பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டி உள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

நாடு முழுவதும் 211 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கெல்லாம் மேலும் வேகமாக பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

அதனால், வைரஸ் பரவுவதைத் தடுக்க அப்பகுதியில் வசிக்கும் மக்கள் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவர்.

வைரஸ் பரவும் வேகத்தைப் பொறுத்து இந்த காலம் நீட்டிக்கப்படலாம். கடைகளை திறப்பதற்கு நேரக் கட்டுப்பாடும் விதிக்கப்படலாம்.

இந்த புதிய திட்டத்தின்படி, குறிப்பிட்ட பகுதியை பிற பகுதிகளிலிருந்து துண்டித்தல், சமூக இடைவெளி, தீவிர கண்காணிப்பு, சந்தேகத்துக்குரிய நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, அவர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

வைரஸ் தொற்று சங்கிலி போல நீள்வதை உடைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இதன்மூலம் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால் வேகமாக பரவியுள்ள மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே