பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு

பாஜக செயல் தலைவராக பொறுப்பு வகித்து வரும் ஜே.பி நட்டா இன்று முறைப்படி அக்கட்சியின் தேசியத் தலைவராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாரதிய ஜனதாக் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி பின்பற்றப்படுகிறது. அதன்படி 2014ம் ஆண்டில் அக்கட்சியின் தலைவராக இருந்த ராஜ்நாத்சிங் உள்துறை அமைச்சரானதால் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

அதன்பின்னர் பொறுப்பேற்ற அமித்ஷா, மோடி தலைமையிலான இரண்டாவது அரசில் உள்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

இதையடுத்து கட்சியின் செயல் தலைவர் பதவி ஜே.பி. நட்டாவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் இன்று பெறப்படுகின்றன.

அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் ஜே.பி. நட்டா சார்பில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

மாலைவரை வேறு யாரும் மனு அளிக்காவிட்டால் நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.

நட்டா தலைவராக தேர்வாவது உறுதியாகிவிட்ட நிலையில், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. முன்னணித் தலைவர்களும் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

59 வயதான நட்டா பீகாரில் படித்து பட்டம் பெற்றவர். 1993ல் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், மோடியின் கடந்த அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே