பாஜகவின் கொரோனா தடுப்பூசி வாக்குறுதி.., விதிமீறலா? – தேர்தல் ஆணையம் விளக்கம்..!!

பிஹாரில் கரோனா வைரஸ் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் சேராது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. முதல்கட்டத் தேர்தல் கடந்த 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது.

அடுத்த இரு கட்டங்கள் நவம்பர் 3, 7-ம் தேதிகளில் நடக்கிறது, 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இந்த தேர்தலில் பாஜக சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், ‘ பிஹாரில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஐசிஎம்ஆர் அங்கீகாரம் அளித்தபின், அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’ என அறிவித்தார்.

பாஜகவின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் அறிவிப்பு, கரோனாவை பயன்படுத்தி அரசியல் ஆதாயம்தேடும் முயற்சி இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் புகார் கூறின.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ‘ கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்குவது இருக்கட்டும் எப்போது அதை வழங்குவீர்கள் என்பதற்கு காலக்கெடு இருக்கிறதா’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

பாஜக தரப்பில் கூறுகையில், ‘ மருத்துவம், சுகாதாரம் என்பது மாநிலஅரசுக்கு கட்டுப்பட்டது.

இந்த வாக்குறுதி ஒட்டுமொத்த தேசத்துக்குமானது அல்லது. மாநில மக்களுக்கு ஓர் அரசு வாக்குறுதியளித்தால், மக்களுக்கு நிச்சயம் வழங்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்டிஐ ஆர்வலர் சாகேத் கோகலே, தேர்தல் ஆணையத்திடம் பாஜகவின் தேர்தல் வாக்குறுதியான அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம் என்பது குறித்து புகார் செய்திருந்தார்.

அதில் ‘ மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பிஹார் தேர்தலில் ஆதாயம் தேடப் பார்க்கிறது. அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைமீறல்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் ‘ தேர்தல் வாக்குறுதியில் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற பாஜகவின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் சேராது. இந்த அறிவிப்பில் எந்தவிதமான விதிமுறைமீறலும் இல்லை.

தேர்தல் அறிக்கைக்கான சில வழிகாட்டு நெறிமுறைகள், நடத்தை விதிமுறைகள் 8-ம் பிரிவில் இருக்கிறது. அந்த வகையில் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கும் பாஜகவின் வாக்குறுதியை விதிமுறை மீறலில் சேர்க்க முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநிலக் கொள்கையை வழிநடத்தும் கோட்டுப்பாடுகளின்படி, மக்களுக்கு நலன் சார்ந்த அறிவிப்புகளை அரசுகள், கட்சிகள் வெளியிடுகின்றன.

தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற நலன்சார்ந்த வாக்குறுதிகளுக்கு தடையில்லை.

இதுபோன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றக்கூடிய வகையில் இருந்து அதன் மூலமே வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே