கொரோனா குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் – சார்க் நாடுகளுக்கு பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவோம் என காணொலி வாயிலாக நடைபெற்ற சார்க் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தெற்காசியாவில் கொரோனா வைரஸை எதிர்கொள்வது குறித்து சார்க் நாடுகளுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காணொலி வாயிலான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர்,

“சுகாதார வசதிகளை அணுகுவதில் வளரும் நாடுகளாக நாம் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. நம் மக்களுக்கிடையிலான உறவு பழமை வாய்ந்தது. நம் சமூகம் மிகவும் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. நாம் இதை எதிர்கொள்வதற்குத் தயாராகி ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்.

இதுவரை சார்க் பிராந்தியத்தில் 150-க்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். மனித சமூகத்தில் 5-இல் ஒரு பங்கு மக்கள் சார்க் பிராந்தியத்தில்தான் வசிக்கின்றனர். இது மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டது.

முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஆனால் அச்சம் கூடாது. இதுதான் எங்களை வழிநடத்தும் மந்திரமாக உள்ளது.

ஜனவரிக்கு மத்தியில் இருந்தே இந்தியாவுக்குள் வருபவர்களைக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டோம். அதன்பிறகு, படிப்படியாக பயணங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களை அணுக நாங்கள் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.

பல்வேறு நாடுகளில் இருந்து இதுவரை 1400 இந்தியர்களை மீட்டுள்ளோம். அண்டை நாட்டு மக்கள் சிலருக்கும் நாங்கள் உதவி புரிந்துள்ளோம்.

நமது சிறப்பான முயற்சிகளுக்கு மத்தியிலும் நிலைமை எப்படி மாறும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. நீங்களும் இந்த பிரச்னையை எதிர்கொள்ளலாம்.

கரோனா அவசரகால நிதியாக இந்தியா 10 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்குகிறது. இது அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற பங்களிப்பின் அடிப்படையில் இருக்கக்கூடும்” என்றார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 107 ஆக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே