“மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதா என்று கூறினாலும் கூறிவிடுவார்கள்” – துரைமுருகன் காட்டம்..!

“கொஞ்சம் ஏமாந்தால் “மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னாலும் சொல்லுவார் என்று திமுக பொதுச்செயலாளரும், மூத்த தலைவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

2 தினங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, ஸ்டாலின் ஜோதிடம் பார்ப்பவராக இருக்கிறார் நாங்கள் ஜோதிடம் பார்க்கவில்லை மக்களை தான் நம்புகிறோம்…

துரைமுருகன் மகனை யாராவது மிரட்ட முடியுமா சாதாரண திமுக தொண்டன் கூட மிரட்ட முடியாது.. 14,000 கோடி மதிப்புள்ள காவிரி குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், திமுகவின் துரைமுருகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்…

அதில் உள்ளதாவது: “காவேரி – குண்டாறு திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வரும் 2021 ஜனவரியில் தொடங்கி நிறைவேற்றப்படும்” என்ற அறிவிப்பை ராமநாதபுரத்தில் மாண்புமிகு முதல்வர் பழனிச்சாமி செய்திருக்கிறார்.

இது ஒன்றும் புதுமை இல்லை. காரணம், சேலத்தில் பேசும்போது, “வரும் ஜூன் மாதம் காவேரி – குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்” என்றார். சட்டமன்றத்தில் பேசும்போது “அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப்படும்” என்றார்.

2020ஆம் ஆண்டில் இப்படி எல்லா மாதங்களிலும் அடிக்கல் நாட்டப்படும் என்று அறிவித்தாகிவிட்டது. எனவேதான், 2021 ஜனவரிக்கு போயிருக்கிறார் முதல்வர்.

பாராளுமன்றத் தேர்தலுக்காக ஒரு அறிவிப்பு – உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்காக ஒரு அறிவிப்பு என்று இந்த காவேரி – குண்டாறு திட்டத்தை பயன்படுத்திக் கொண்டவர், 2021-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக ஜனவரியில் அடிக்கல் நாட்டு விழா என்கிறார் முதல்வர்.

எல்லா திட்டத்திற்கும் இவர்கள் பாடுகின்ற பாட்டையேதான், இப்பொழுது முதல்வரும் பாடியிருக்கிறார். இது எங்களுக்கு கேட்டு கேட்டு புளித்துப் போன சங்கதி.

முதல்வர் இத்தோடு நின்றிருந்தால், ஏதோ சாகிற காலத்தில் சங்கரா, சங்கரா என்பதுபோல் பேசுகிறார் என்று விட்டுவிடலாம்.

ஆனால், அவர் மிகப் பெரிய பொய்யை அல்லவா அந்தக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். இந்த காவேரி – குண்டாறு திட்டம், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம்” என்று பேசியிருக்கிறார்.

மக்களுக்கு மறதி அதிகம் என்ற நினைப்பில், 1998-99ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டத்தை, யார் இத்தனை காலத்திற்கு ஞாபகம் வைத்திருப்பார் என்ற மனப்பான்மையில் ‘ஜெயலலிதா ஆரம்பித்தார்’ என்று முதல்வர் பழனிச்சாமி பேசியிருக்கிறார்.

அன்றைக்கு பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த நான் இன்றும் இருக்கிறேன்.

“காவேரி – குண்டாறு” திட்டம் மட்டுமல்ல;

“தாமிரபரணி – கருமேனியாறு” திட்டம்,

“சாத்தனூர் – செய்யாறு” திட்டம் ஆகிய திட்டங்களைச் சேர்த்துதான் அன்று முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

அறிவிப்போடு நில்லாமல், காவேரியில் மிகையாக வரும் நீரை தடுத்து குண்டாறு வரை கொண்டு போக, திருச்சி மாயனூர் அருகில் ஒரு தடுப்பணை கட்ட உத்தரவிட்டார். ரூ.189 கோடியில், அந்த தடுப்பணையை கட்டி முடித்தது நான்தான்;

கட்டி முடித்த அந்த அணையை திறந்ததுதான் ஜெயலலிதா.

அதேபோல், தாமிரபரணி – கருமேனியாறு திட்டத்தை துவக்கி, நாலு பகுதிகள் உள்ளடக்கிய அந்த திட்டத்தில், இரண்டு பகுதிகளையும் முடித்ததும் நாங்கள்தான்.

இந்த பத்தாண்டு காலத்தில் நில ஆர்ஜிதம்கூட இந்த அ.தி.மு.க. அரசு செய்யவில்லை.

உண்மை இவ்வாறிருக்க, ‘காவேரி – குண்டாறு திட்டத்தை அறிவித்தது ஜெயலலிதா’ என்று முதல்வர் பழனிச்சாமி போட்டாரே ஒரு வெடி!

கொஞ்சம் ஏமாந்தால், “மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதா” என்று கூறினாலும் கூறிவிடுவார்கள்!”என்று தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே