எம்ஜிஆர் சிலை மீது காவித் துண்டு; கொரோனாவை விட மோசமான விஷக் கிருமிகள் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலை அவமதித்த சமூக விரோதிகளை மக்கள் அடையாளம் கண்டு புறந்தள்ள வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் 14-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பில் அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.

இதில், அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 2 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப், வீர தமிழன் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றுக்கு அம்மா விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், வட்டாட்சியர் பாஸ்கரன், பேரூராட்சி அலுவலர் ஜோதிபாசு, பேரூராட்சி உதவி பொறியாளர் அன்னம், உதவி செயற் பொறியாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3,600 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,300-க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய வசதியை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலையை அவமதிப்பு செய்தது சமூக விரோதிகளின் சதி. அவர்கள் கரோனா வைரஸைவிட மோசமான விஷக்கிருமிகள்.

சமுதாயத்துக்கு ஊறுவிளைவிப்பவர்கள், மத நல்லிணக்கத்துக்கு கேடு விளைப்பவர்கள். அவர்களை தண்டிக்க வேண்டும்.

அவர்களை மக்களும் அடையாளம் கண்டு புறந்தள்ள வேண்டும், என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே