இந்தியச் சுழலில் மீண்டும் சிக்கிய இங்கிலாந்து: 205 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’!

இந்தியாவுக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து  205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான கடைசி மற்றும் 4-ஆவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கிராவ்லியும், சிப்லேவும் களமிறங்கினர். இதில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் முதலில் சிப்லே ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிலைத்து நின்று விளையாட முயற்சி செய்த கிராவ்லி 9 ரன்களில் அக்ஸர் படேல் சுழலில் சிக்கி அவுட்டானார்.

இதனையடுத்து பெரும் பலமாக இருக்கும் கேப்டன் ஜோ ரூட் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்து திணறியது. தொடர்ந்து விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 28 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர், களத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஒல்லி போப் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார்.

ஆனால் 51 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஒல்லி போப் 29 ரன்களுக்கும், பென் போக்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்த இருவரின் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  இதனையடுத்து லாரண்ஸும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் அந்த அணி தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்து 205 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா தரப்பில் அக்ஸர் படேல் 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே