சட்ட விரோத இ – பாஸ்…மோசடி கும்பல் சிக்கிய பின்னணி..!

சென்னையில் சட்ட விரோதமாக இ – பாஸ் வழங்கிய இரண்டு அரசு ஊழியர்கள் உட்பட 5 பேரை தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த மாவட்டங்களுக்கும், வெளி மாநிலத்திற்கும் அவசர தேவைக்காக செல்பவர்களுக்கு தமிழக அரசின் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இறப்பு, திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை ஆகிய காரணங்களுக்கு மட்டும், உரிய ஆவணங்கள் இருந்தால் தான் இ-பாஸ் வழங்கப்படுகிறது.

இதுபோன்ற அவசர காரணமாக இருந்தாலும் சென்னையில் இருந்து விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அவ்வளவு எளிதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் இ-பாஸ் வழங்குவதில்லை. ஆனால், சென்னைக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து வருவது போல் விண்ணப்பித்து, சட்ட விரோதமாக இ – பாஸ் வழங்கி சென்னையில் இருந்து நூற்றுக் கணக்கானவர்களை மற்ற ஊர்களுக்கு டிராவல்ஸ் கார் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்து பேக்கேஜ் முறையில் பெரும் தொகையாக கறந்துள்ளது ஒரு கும்பல். இதற்கு மூளையாக மாநகராட்சியின் மூத்த வருவாய் ஆய்வாளரும், இ-பாஸ் வழங்கும் பணியில் ஈடுபட்ட குமரன் என்கிற அதிகாரி தான் செயல்பட்டுள்ளார்.

முதலில் இ – பாஸ் முறைகேடாக வழங்கப்படுவதாக ஆன்லைன் மூலம் புகார்கள் வந்ததால் இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இந்த கும்பல் மூலம் இ – பாஸ் பெற்ற நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மனோஜ்குமார் என்ற டிராவல்ஸ் ஓட்டுநரை தொடர்பு கொண்டு, சென்னையில் இருந்து செல்ல இ – பாஸ் வேண்டும் என போலீஸ் ஒருவர் கேட்க, 2 ஆயிரம் கமிஷன் தொகையுடன் சேர்த்து காருக்கான பேக்கேஜ் தொகையையும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக மனோஜ்குமார் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்த போலீசார் மேலும் இரு டிராவல்ஸ் கார் ஓட்டுநர்களான வினோத்குமார், தேவந்திரன் இருவரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவி பொறியாளரான உதயக்குமார் பின்னர் இ- பாஸ் பணியில் உள்ள வருவாய் ஆய்வாளர் குமரன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், அவசர காரணங்கள் ஏதும் இல்லாமல் வெளியூர் சென்ற நபர்கள் இந்த டிராவல்ஸ் ஓட்டுநர்கள் மூலம் இ – பாஸ் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து பெற்றுள்ளனர் என்பதும், கடந்த ஒரு மாதத்திற்கு மேல் இவர்கள் சட்ட விரோதமாக சென்னையில் இருந்து சென்ற நூற்றுக்கணக்கானவர்களுக்கு இ – பாஸ் கொடுத்து கமிஷன் பெற்றுள்ளனர் என்பதும் விசாரணையில் அம்பலமானது.

உதாரணமாக சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல விரும்புவர் விண்ணப்பித்தால் மதுரை மாவட்ட நிர்வாகம் தான் இ – பாஸ் வழங்குவதை பரிசீலிக்கும். அதனால் மதுரை உட்பட அவரவர் செல்ல வேண்டிய மாவட்டத்திலிருந்து – சென்னைக்கு விண்ணப்பித்து, இ பாஸ் வழங்குமிடத்தில் இருக்கும் அதிகாரி குமரன் மூலம் அனுமதி தரப்பட்டுள்ளது. அதை வைத்து டிராவல்ஸ் கார் ஓட்டுநர்கள் மூவரும் சென்னையிலிருந்து பலரையும் அழைத்து சென்றுள்ளனர்.

இதனால் சென்னையில் இருந்து அவ்வாறு சென்றவர்களால் நோய் தொற்று பரவும் சூழல் உள்ளதால், கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் தொற்று நோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோயை மற்றவர்களுக்கு பரப்பும் வகையில் செயல்படுதல் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை 5 பேரையும் வரும் 8 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவசர தேவைகளின்றி இது போன்ற இடை தரகர் மூலம் முறைகேடாக இ- பாஸ் பெற்று பயணிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டி வரும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே