கூட்டணி நிர்பந்தம் காரணமாகவே, குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு அளித்ததாக, அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் கூட்டணி கட்சிகளுக்கு இருந்தது என்றும்; அந்த நெருக்கடியை பாஜக நேரடியாக தரவில்லை எனவும் கூறியுள்ளார்.
மசோதா குறித்து கட்சி அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது தலைமைசெயலகத்தில் இருந்து துணை செயலாளர் ஒருவர் தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மசோதாவில் முஸ்லிம் என்ற வார்த்தை இடம்பெறாதது நிச்சயம் தவறுதான் என தெரிவித்துள்ள அவர், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு அதிமுக ஆதரவு அளித்திருப்பதால், அதன் வாக்கு வங்கி பெரிய அளவில் பாதிக்கும் என சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஆதரித்ததற்கு அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அளித்திருக்கும் விளக்கம் கவலைக்குரியது என்றும்; கேலிக்குரியது எனவும் காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தலைமைசெயலகத்தின் துணை செயலாளரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைக்குனிவு என்றும் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.


 
							