‘மக்களை சாதாரணமாக நினைக்க வேண்டாம்; வலிமை வாய்ந்த இந்திராகாந்தி, வாஜ்பாய் கூட தேர்தலில் தோற்றுள்ளனர்’ – சரத்பவார் எச்சரிக்கை!

அரசியல் வாதிகளைவிடவும் வாக்காளர்கள் வலிமை மிக்கவர்கள். இந்திரா காந்தி, வாஜ்பாய் போன்ற வலிமையான தலைவர்கள் கூட தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர். அவர்களைச் சாதாரணமாக நினைக்கவேண்டாம்’ என்று எச்சரித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், “நான் மீண்டும் திரும்பி வருவேன்” என்று கூறியதற்குப் பதிலடியாக சரத்பவார் கூறியுள்ளார்.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வழக்கமாகப் பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகியோரின் நேர்காணல் தான் வெளிவரும். ஆனால், முதல் முறையாக சரத்பவாரின் நேர்காணல் வெளியாகியுள்ளது. அதில் சரத்பவார் கூறியிருப்பதாவது…

“ஜனநாயகத்தில், முடிவில்லாமல் நாம் பதவியில் இருப்போம் என்று எப்போதுமே நினைக்கக் கூடாது. வாக்காளர்களைத் துச்சமாக நினைத்தால் அவர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். சக்தி வாய்ந்த, புகழ்பெற்ற தலைவர்களான இந்திரா காந்தி, அடல்பிகாரி வாஜ்பாய் கூட தேர்தலில் தோற்றுள்ளனர். இதன் மூலம், ஜனநாயக நாட்டில் அரசியல் வாதிகளை விடவும் சாமானிய மக்கள் புத்திசாலிகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லை மீறும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் எப்போதுமே பாடம் புகட்டுவார்கள். மீண்டும் ஆட்சிக்கு வருவேன் எனும் நிலைப்பாட்டிலேயே சிந்திப்பது அகங்காரமாகும். இது வளரும் பட்சத்தில் மக்கள் பாடம் புகட்டுவர். பால்தாக்கரேவின் அரசு சித்தாந்தத்தால் உருவானது அல்ல. ஆனால், அரசு அதிகாரத்தை செயல்படுத்தும் பொறுப்பு அவரிடம் உள்ளது” என்று கூறி உள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே