மருத்துவர்கள் போராட்டம்.. தமிழக அரசு எச்சரிக்கை..!

தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 25ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள், வேலை நிறுத்தம், மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காய்ச்சல் மற்றும் அவசர சிகிச்சை தவிர மற்ற பணிகளை புறக்கணித்துள்ளனர்.

இதனால், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை தள்ளி வைப்பதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஆனால் தங்களுடன் அரசு இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக் கூறி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டத்தைத் தொடர்கிறது.

90 விழுக்காடு மருத்துவர்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும் அந்தக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடாத சங்கத்தை அழைத்து அரசு பேசி இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதற்கிடையே அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் டீன்கள் மற்றும் துறைகளின் தலைவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், போராட்டத்திற்கு யாரும் செல்லாத வகையில், தங்களின் அனுமதியின்றி, மருத்துவர்கள் யாரும் விடுப்பு எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

எச்சரிக்கையையும் மீறி, தங்களுக்கான பணிகளை விட்டுவிட்டு, போராட்டத்தில் பங்கேற்றால், பணிபயிற்சி நிறைவு சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், பணி நீட்டிப்பு உள்ளிட்டவை கிடைப்பதற்கு, பாதகமாகிவிடக் கூடும் என்பதை மருத்துவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று பிற்பகல் 2 மணிக்குள் பணிக்கு வராமல் இருந்தால், காலிப் பணியிடங்களாக அறிவித்து மாற்று மருத்துவர்களை நியமிக்க அரசு தயங்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே