குடும்ப அரசியலாக திமுக மாறிவிட்டது : கு.க.செல்வம்

திமுகவின் முக்கிய பதவிகளில் இருந்து கு.க.செல்வம் நீக்கப்பட்ட நிலையில் கு.க.செல்வம் திமுகவிற்கு சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கும் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் நேற்று டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் திரும்பவந்த கு.க.செல்வம் தான் பாஜகவில் இணையவில்லை என்றும், தொகுதி மேம்பாடு குறித்து பேச சென்றதாகவும் கூறினார்.

ஆனால் கு.க.செல்வம் டெல்லி சென்றது திமுக தலைமைக்கே தெரியாது என கூறப்படுகிறது.

திமுக எம்.பிக்கள், தலைமை ஆகியவற்றிடம் இதுகுறித்து விவாதிக்காமல் நேரடியாக டெல்லி சென்றதும் பாஜக தலைவரை சந்தித்ததும் ஏன் என கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில் கு.க.செல்வத்தை திமுகவின் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

அதன்படி கு.க.செல்வம் திமுக தலைமை நிலைய செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு திமுக தலைமை கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு சென்ற கு.க.செல்வம் அங்குள்ள ராமர் திருவுறுவத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார்.

அவருடன் கே.டி.ராகவன் உள்ளிட்ட சில பாஜக பிரமுகர்களும் இருந்துள்ளனர்.

கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கு.க.செல்வம் ‘ரயில் நிலையத்தில் லிஃப்ட் வசதி குறித்து கேட்கவே டெல்லி சென்றேன். திமுக என்னை பதவியிலிருந்து நீக்கினால் எனக்கு கவலை இல்லை. திமுகவில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறிவிட்டது’ என பேசியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே