ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்..!!

மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இன்று வீடுகள் முன்பும், கட்சிகளின் தலைமையிடம் முன்பும் கறுப்புக் கொடியேந்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் அண்ணா அறிவாலயம் முன்பு இன்று காலை கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி., திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனாம்பேட்டையிலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்ணா நகரில் உள்ள தனது வீட்டின் முன்பும், எம்.பி., எம்.பி. கனிமொழி சிஐடி காலனியிலும் போராட்டங்களை நடத்தினர்.

காங்கிரஸ், விசிக கட்சிகள் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே