234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உத்தரவிட்டார்.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்ற வரம் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது 3வது அணி அமைப்பதா என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கபட்டது.
இது குறித்து பேசிய பிரேமலதா, தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து அடுத்த மாதம் நடக்கும் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உத்தரவிட்டார்.
இதுதொடர்பான அறிக்கையில் கூறியதாவது; நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொது தேர்தலுக்கு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் 234 தொகுதிகளுக்கும் முதல்கட்டமாக பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.
இவர்களுக்கு மாவட்டம், ஒன்றிய, நகர, பகுதி, வார்டு, வட்டம், ஊராட்சி, கிளை கழகம், சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.