கமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர்..! விசாரணையா ? விருந்தா ?

இந்தியன்-2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து குறித்த விசாரணைக்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த இயக்குநர் ஷங்கரை, விருந்தினர் போல உதவி ஆணையர்கள் அழைத்துச்சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலியானது தொடர்பான விபத்து வழக்கை சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என தயாரிப்பு நிறுவனமான லைக்கா மீது குற்றஞ்சாட்டி நடிகர் கமல்ஹாசன் அறிக்கைவிட்டிருந்த நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் அனுபவம் வாய்ந்த நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் படப்பிடிப்பில் இருந்ததால் அவர்கள் பொறுப்புடன் கவனித்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் விட்டிருந்ததாக கூறி லைக்கா பதில் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் விசாரணைக்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தார். அவர் வந்திருக்கும் தகவல் அறிந்ததும், மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ள உதவி ஆணையர் ஒருவர், காவல் ஆணையரை சந்திக்க வரும் முக்கிய விருந்தினர்களை அழைத்துச்செல்வது போல ஷங்கரை யார் கண்ணிலும் படாமல் சிறப்பு வழியில் உயரிய விருந்தினர் போல விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது.

சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த விசாரணையில் லைக்கா நிறுவனம், இந்தியன் 2 படப்பிடிப்பு ஊழியர்கள் அனைவருக்கும் காப்பீடு செய்ய தவறி விட்டதாகவும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைமுன் கூட்டியே செய்து கொடுக்க தவறி விட்டதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், இதனால் தான் விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சைக்கூட அளிக்க இயலவில்லை என்பது போல பதில் அளித்ததாக கூறப்படுகின்றது.

நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா ? என்ற அய்யம் எழுந்துள்ள நிலையில் விசாரணைக்கு வந்த ஷங்கரை ஊடகத்தினர் படம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவரை காவல் ஆணையர் மட்டும் வந்து செல்ல பயன்படுத்தும் லிப்ட்டில் ஏற்றி பின் பக்கமாக அழைத்து சென்று அவரது வழக்கறிஞரின் காரில் ஏற்றி பத்திரமாக வழியனுப்பி வைத்துள்ளார் மக்கள் தொடர்பு பொறுப்பில் உள்ள உதவி ஆணையர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

விபத்து வழக்கு விசாரணைக்கு வந்தவர்களை விருந்துக்கு வந்தவர்கள் போல உபசரித்து அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோன்ற பாசத்தை மற்ற வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகும் நபர்களிடமும் காட்டினால், சென்னை பெருநகர காவல்துறையினரின் சேவையை மனதாரப் பாராட்டலாம்..!

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே