2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்… எம்.பி.சுப்ரமணியன் சுவாமி..!!

2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களை ஏறத்தாழ 16 ஆண்டுகள் தன் அசாத்திய திறமைகளால் கட்டிப்போட்டவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தோனி. கிரிக்கெட்டை ரசிக்கும், விளையாடும் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த தோனி, திடீரென நேற்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை. அப்போதில் இருந்தே தோனியின் ஓய்வு குறித்த யூகங்கள் கொடி கட்டி பறந்தன.

ஆனாலும், இந்திய அணிக்காக இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். எதற்குமே அலட்டிக்கொள்ளாமல் மிகவும் கூலாக (Cool) வலம் வரும் தோனி, ஓய்வு அறிவிப்பையும் எந்த முன் அறிவிப்பும், எந்த படோபடமும் இன்றி மிக சாதாரணமாக அறிவித்துவிட்டார்.

தோனியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து அவரது சாதனைகள் குறித்த பதிவுகள், உங்களை கிரிக்கெட் களத்தில் மிஸ் செய்கிறோம் என பல அடுக்கடுக்கான பதிவுகளை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்தினை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சுப்ரமணியன் சுவாமி, எம்.பி.பதிவிட்டதாவது, ” கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் தோனி ஓய்வு பெற்றாரே தவிர வேறு எதிலிருந்தும் இல்லை. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே