தோனி மிக உயர்ந்த மனிதர்; சாம் கரனிடம் தோனியின் தாக்கம் இருந்தது: ஜாஸ் பட்லர் புகழாரம்

எம்.எஸ். தோனி மிக உயர்ந்த மனிதர். தோனியின் தாக்கம் சாம் கரனின் பேட்டிங்கில் தெரிந்தது என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் புகழாரம் சூட்டினார்.

புனேவில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் மிகுந்த போராட்டத்துக்குப் பின் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.

ஆனால், அதன்பின் அதில் ரஷித், மொயின் அலி, மற்றும் மார்க் உட் ஆகியோருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு வந்த பெருமை சாம் கரனை மட்டுமே சேரும். 8-வது வரிசையில் களமிறங்கிய சாம் கரன் 95 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணியின் வெற்றியை ஏறக்குறைய பறித்துவிடக்கூடிய நிலையில்தான் சாம் கரன் ஆட்டம் அமைந்திருந்தது. வெற்றி இந்திய அணிக்குத்தான் என்றாலும், ஆட்டத்தில் ஹீரோ சாம் கரன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

”சாம் கரன் உண்மையில் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். அவரின் உழைப்புக்கு ஏற்ற பலனாக வெற்றி கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் பாதிப்பு, தாக்கம் சாம் கரனிடம் இருப்பதைப் பார்க்கிறேன். கடைசிவரை போராடுவது, ஆட்டத்தை ஃபினிஷிங் செய்ய முயல்வது, வெற்றி கிடைக்கும்வரை ஆட்டத்தை எடுத்துச் செல்வது என்ற தீர்க்கத்தைப் பார்க்கிறேன்.

தோனி மிக உயர்ந்த மனிதர். அவருடன் உரையாடும் வாய்ப்பை சாம் கரன் பெற்றுள்ளார். தோனியின் உண்மையான தாக்கம்தான் சாம் கரனின் ஆட்டத்தில் காணப்பட்டது. சாம் கரன் இதே ஆட்டத்தைத் தொடர்ந்தால் சிறப்பாக முன்னேறலாம். சாம் கரனுக்கு தற்போது 22 வயதுதான் ஆகிறது. ஆனால், ஆட்டத்தைக் கடைசி வரை எடுத்துச் சென்று பெருமைக்குரியவராகிவிட்டார். அவரின் ஆட்டம் எங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது.

இதுபோன்ற கடினமான சூழல்களில் பல வீரர்கள் தங்களை வெளிக்காட்டாமல் இருந்து விடுவார்கள். ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சாம் கரன், அதிலிருந்து ஏராளமானவற்றைக் கற்றுக் கொண்டுள்ளார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்னைப் பற்றி நான் சிந்தித்தது கூட இல்லை.

சாம் கரன் விளையாடிய விதத்தில் இருந்து அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். தனி வீரராக இருந்து அணியைத் தோல்வியடையாமல் கொண்டு செல்ல முயல வேண்டும் எனச் சிந்தித்தோம். உண்மையில் சாம் கரன் மேட்ச் வின்னர்தான். ஃபீல்டிங்கில் ரிஷப் பந்த் விக்கெட்டையும் சாம் கரன்தான் வீழ்த்தினார்”.

இவ்வாறு ஜாஸ் பட்லர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே