வேல் யாத்திரை குறித்த வழக்கில் டி.ஜி.பி. திரிபாதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து நவம்பர் 6 -ம் தேதி முதல் வேல் யாத்திரை தொடங்கும் என்றும், இந்த யாத்திரை டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறும் என தமிழக பாஜக அறிவித்தது.

அதன்படி கடந்த 6-ம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை தமிழக பாஜக தொடங்கியது.

வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி அளித்தால் கொரோனா வைரஸ் பரவும் என அச்சம் தெரிவித்த தமிழக அரசு, யாத்திரைக்கு அனுமதி மறுத்தது.

இதை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெளிவாக குறிப்பிட்டது. ஆனாலும், தடையை மீறி வெற்றிகரமாக பாஜக வேல் யாத்திரை நடத்தியது.

இதனையடுத்து, சென்னை திருவொற்றியூரிலும், அடுத்து, காஞ்சிபுரத்திலும் வேல் யாத்திரை நடைபெற்றது. 

இந்த நிலையில், சென்னை உயர் நீதி மன்றத்தில் வேல்யாத்திரை தொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில், விதிமுறைகளை மீறியதாக வேல் யாத்திரை நடத்திய பாஜகவினர் 2 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், வேல் யாத்திரையின் போது பாஜக-வினர் முகக்கவசம் அணிவது இல்லை, தனி மனித இடைவெளியை பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாஜகவின் வேல் யாத்திரையால் சாலையில் செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

பாஜகவினர் கட்டுப்பாடு, சுய ஒழுக்கத்தை கடைபிடிக்கவில்லை. 10 வாகனங்களில் 30 பேர் செல்வதாக பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாஜகவின் வேல் யாத்திரை விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், அடுத்த கட்ட பரபரப்பை நோக்கி தமிழகம் சென்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே