வெள்ளைக்காரனை விரட்டிய காங்கிரஸ் சில சீட்டுகளுக்காக கொள்ளைக்காரர்களின் வாட்ச்மேனாக மாறிவிட்டது. யார் வந்தாலும் 6 சீட்டு என திமுக உறுதியுடன் நிற்க, கொள்கை பேசிய கம்யூனிஸ்டுகள் ஆறு மனமே ஆறு என்று உடன் நின்றார்கள் என்று கமல் விமர்சித்தார்.

மேலும், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்காக காங்கிரஸ் பேசியது உண்மை என்றும் கமல் தெரிவித்தார்.

சென்னை மின்ட் சந்திப்புப் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:

”மூன்றாவது அணி வென்றதாக சரித்திரமே இல்லை, சாத்தியமே இல்லை, இதெல்லாம் எடுபடாது சாத்தியமே இல்லை என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, இன்னொரு புறம் சிதம்பரம் & சன்ஸ் செய்தி அனுப்புகிறார்கள், நீங்கள் காங்கிரஸுக்கு வாருங்கள், அதுதான் நல்லது என்று. வெல்லாத கட்சியை எதற்காக அழைக்கிறீர்கள். நல்லவர்கள்.

என் அப்பா காங்கிரஸில் இருந்தார். அந்த மரியாதை எனக்கு உண்டு. வெள்ளைக்காரனிடமிருந்து நாட்டை மீட்ட அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொள்ளைக்காரர்களுக்கு வாட்ச்மேனாக இருப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.

மூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். அது வதந்தி என்று அவர்கள் சொல்கிறார்கள். இல்லை என்று நான் சொல்கிறேன்.

வதந்தி என்று அவர்கள் சொல்வதற்குக் காரணம் அவர்கள் அங்கே வாங்கும் சீட்டுக்காக. அதிலும் மக்கள் நலன் என்பது இந்த இருவரிடமும் சீட்டு வாங்கும் எத்தனை பேருக்கு இருக்கிறது.

யார் வந்தாலும் 6 சீட்டுதான். இந்தப் பக்கமும் 6 சீட்டு, அந்தப் பக்கமும் 6 சீட்டு. இவர்களும் கொடுத்ததை வாங்கிக்கொண்டு ஆறு மனமே ஆறு என்று வந்துவிடுகிறார்கள்.

ஐயா, மரியாதையான 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்சி. சோபாவில் உட்கார்ந்து பேசலாம் வாங்க என்று கூறினால், ‘இல்லைங்க.

நாங்கள் தவழ்ந்தே போய்க்கொள்கிறோம். எங்களை விட்டுவிடுங்கள்’ என்று சொல்கிறார்கள். 101 இடங்கள் வாங்கிய காங்கிரஸ் இன்று தவழ்ந்து செல்கிறது.

இவ்வளவு பெரிய கட்சி தவழலாமா? இந்தப் பாடத்தை எடப்பாடி பழனிசாமியிடம் கற்றுக்கொண்டீர்கள் என்று அர்த்தம்.

அவர் படம் போட்டுப் போட்டுக் காட்டியதில், ஆஹா! இது நல்ல வழி போல என்று. இவ்வளவு பெரிய கட்சி தவழலாமா? சரி போய்விட்டீர்கள். மீண்டும் வருவீர்கள். ஆனால், செய்த தவறைச் சொல்லவேண்டிய கடமை எனக்கு உள்ளது.

சேரி திரளும்; அன்று நாடு புரளும். தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக என்று பேசியவர்கள் இன்று அதே 6 சீட்டுக்காக அங்கு இருக்கிறார்கள்.

ஆறுகள் எல்லாம் இன்று காலி. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதே தவறைச் செய்வார்கள்”.

இவ்வாறு கமல் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே