ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது; முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது ரயில்வே

நாளை தொடங்கப்பட உள்ள பயணிகள் ரயில் சேவையை முன்னிட்டு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கியது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 51 நாள்களாக ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் நாளை முதல் டெல்லியிலிருந்து ரயில்சேவை தொடங்கப்படுகிறது.

இது குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதாவது, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கும் முகவர்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.

அதிகபட்சமாக 7 நாட்களுக்கு முன்பு வரை ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

உறுதியான ரயில் டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆர்ஏசி மற்றும் காத்திருப்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.

ரயிலில் ஏறிய பிறகு டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் பெறும் முறையும் அனுமதிக்கப்படாது.

முதல்கட்டமாக, டெல்லியிலிருந்து 15 நகரங்களுக்கு ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

அதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி மூலம் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும்.

ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு பெற முடியாது.

எந்தெந்த நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன?

புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து மும்பை, செகந்தராபாத், பெங்களூரு, சென்னை, அகமதாபாத், ஹவுரா, திருவனந்தபுரம், பாட்னா, ஜம்மு, திப்ருகார்க், அகர்தலா, பிலாஸ்புர், ராஞ்சி, புபனேஷ்வர், மட்கோன் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

முன்பதிவை ரத்து செய்யும் வழிமுறை:

முன்பதிவு செய்துள்ள ரயில் புறப்படும் நேரத்துக்கு 24 மணி நேரம் முன்னதாகவே ரத்து செய்யவேண்டும்.

ரத்து செய்வதற்கு 50 சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

எவ்வளவு பயணிகளுக்கு அனுமதி?

சாதரண நாட்களில் ஒரு பெட்டியில் 72 பயணிக்க கூடிய நிலையில் 54 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். சலுகை டிக்கெட்டுகளுக்கு அனுமதி கிடையாது.

பயணிகளுக்கான விதிமுறைகள்:

  • கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக பயணிகள் ரயில் நிலையத்துக்கு வரவேண்டும்.
  • முகக் கவசம் அணிவதும், ஆரோக்கிய சேது ஆப் வைத்திருப்பதும் கட்டாயம்.
  • அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
  • குறிப்பிட்ட ரயில்நிலையங்களில் மட்டுமே ரயில்கள் நிற்கும்.
  • முன்பதிவு உறுதி செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் – டெல்லி இடையே வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் ரயில்கள் இயக்கப்படும்; மறு மார்க்கத்தில் புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே