அமமுக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துக்குமார், அமமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார். இவர், அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்டதாக இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
இதனைக் கண்டித்து, அறிக்கை வெளியிட்டுள்ள டிடிவி தினகரன், முத்துக்குமாரை விடுதலை செய்ய வேண்டுமென்றும் பொய்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளில் சுகாதாரத்துறை அமைச்சர் படம் இடம்பெற்றிருப்பது குறித்து பொதுவெளிகளில் பகிரப்பட்ட தகவலையே, முத்துக்குமார் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
எத்தனையோ ஆயிரம்பேர் பகிர்ந்த ஒரு பதிவுக்காக முத்துக்குமாரை கைது செய்திருப்பது, அதிமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியையும், பழிவாங்கும் நோக்கத்தையும் காட்டுவதாக டிடிவி தினகரன் சாடியுள்ளார்.