கலைமாமணி விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசானது திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருதளித்து சிறப்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளது.
அதன்படி, 2019-20-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வாங்கும் திரைப் பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இதில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பெயர் இடம்பிடித்திருந்தது.
இதற்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். அப்போது, நடிகர் சிவகார்த்திகேயன் விழாவில் பங்கேற்று விருதினை பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைமாமணி விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இன்னும் நிறைய நல்ல படங்களை நடிக்க வேண்டும்.
சமூகம் சார்ந்த கருத்துக்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், மக்கள் பிரதிநிதியாக கோட்டைக்கு வர வேண்டும் என ஆசை இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, கோட்டைக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு குழந்தை இந்த இடத்தை பார்க்கிற போது ஏற்படுகிற பிரம்மிப்பு தான் எனக்கு உள்ளது.
ஒரு சாதாரண குடிமகனாக வர ஆசை உள்ளது தவிர வேறு எதற்கும் ஆசை இல்லை.
இன்னும் என்னுடைய திறமையை அதிகபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.